ஒரு தனிமனிதனின் பிறப்பு ஜாதகத்தில் 12 ராசிகளில் ஒன்பது கிரகங்களும் இருக்கும் நிலையைக் கொண்டு, கோட்சார நிலையில் கிரகங்கள், ஒவ்வொரு ராசியிலும் சஞ்சாரம் செய்யும் காலங்களில், அவர் அனுபவிக்கப் போகும் நன்மை, தீமைகளை அறிந்துகொள்கி றோம். இதனை ஆங்கிலத்தில் Natal-Astrology என்று கூறுகின்றனர்.
உலக நாடுகளில் உண்டாகும் இயற்கைப் பேரிடர்கள், புயல், வெள்ளம், மழை, பூகம்பம், வறட்சி, புதிய புதிய நோய்கள், விமானம், வாகன விபத்துகள், போர், அரசியல், அரசு மாற்றம், முக்கியமானவர்களுக்கு வரப்போகும் ஆபத்துகள், பங்குச் சந்தையில் உண்டாகும் ஏற்ற- இறக்கம் மற்றும் விலைவாசி ஏற்ற- இறக்கம் போன்று இன்னும் பல நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்துகொள்ள ஜோதிடத்தில் பல வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. இதனை ஆங்கிலத்தில் Mundane Astrology என்று கூறுவார்கள்.
ஒன்பது கிரகங்களில் குரு, சனி, ராகு, கேது ஆகிய நான்கும் கோட்சார நிலையில் ஒரு ராசியில் அதிக காலம் தங்கிப் பலன்தரும் கிரங்கள் ஆகும். உலகில் நடைபெறும் அனைத்து நன்மை- தீமைகளுக்கும், தனிமனிதன் வாழ்வில் உண்டாகும் மாற்றங்களுக்கும் இந்த நான்கு கிரகங்களே முக்கிய காரணகர்த்தாக்களாகும். அதனால்தான் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி யாகி ராசி மாறும்போது, முக்கியத்துவம்தந்து புத்தகங்களை வெளியிடுகின்றனர்.
இனி குரு, சனி, ராகு, கேது ஆகியவை ஒவ்வொரு ராசியிலும் சஞ்சாரம் செய்யும் காலங்களில், அவற்றின் கதிர்வீச்சுகளால் உலகில் உண்டாகும் நிகழ்வுகளை சுருக்கமாக அறிந்துகொள்வோம்.
குரு- மேஷம், விருச்சிகம்
குரு, செவ்வாயின் ஆட்சி வீடுகளான மேஷம், விருச்சிக ராசிகளில் சஞ்சாரம் செய்யும் வருடங்களில் காவல்துறை, இராணுவம், தீயணைப்புத்துறை, அறுவை சிகிச்சை மருத்துவம், மின்சாரம், விவசாயம், கட்டுமானப் பொருட்கள், பூமி சம்பந்தமான தொழில்களில் முன்னேற்றம் உண்டாகும். இந்தத் தொழில் துறையினர் முன்னேற்றம் அடைவார்கள்.
குரு- ரிஷபம், துலாம்
குரு, கோட்சா…ர நிலையில் சுக்கிரனின் ஆட்சி வீடுகளான ரிஷபம், துலாம் ராசிகளில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் கலைத்துறை, நிதி, வங்கி, பங்குச்சந்தை, அழகு ஆடம்பரப் பொருட்கள், சொகுசுப் பொருட்கள், கலைப்பொருட்கள், தங்கம், வெள்ளி, வைர ஆபரணங்கள், இயல், இசை, நடனம், நடிப்பு, அழகிப்போட்டி, வட்டித் தொழில் போன்றவை சிறப்பாக இருக்கும். இந்தத் தொழில் துறைகளைச் சேர்ந்தவர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.
குரு- மிதுனம், கன்னி
குரு, புதனின் ஆட்சி ராசிகளான மிதுனம், கன்னியில் சஞ்சாரம் செய்யும் வருடங்களில் கல்வித்துறை, தபால், தகவல் தொடர்புத்துறை, புத்தகம், கணக்கர், ஆடிட்டர், நீதித்துறை, தொழில் ஆலோசகர், பலவிதமான பொருள் வியாபாரம், தரகு, கமிஷன், மண்டி, ஆசிரியர் போன்ற தொழில்கள் சிறப்படையும். இந்தத் தொழில் செய்பவர்களின் திறமை வெளிப்படும்; கௌரவிக்கப் படுவார்கள்.
குரு- கடகம்
குரு, சந்திரனின் ஆட்சி வீடான கடக ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் உணவுப் பொருள், திரவப் பொருட்கள், விவசாயம், மூலிகை மருந்து, ஏற்றுமதி- இறக்கு மதி, போக்குவரத்து போன்ற தொழில்துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்.
குரு- சிம்மம்
குரு சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்களில், அரசியல், அரசு உத்யோகம், சமூக சேவை போன்றவற்றைத் தொழிலாக செய்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள். நேர்மையான அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சமூக சேவகர்கள் மக்களால் பாராட்டப்படுவார்கள்.
குரு- தனுசு, மீனம்
கோட்சார குரு, தன் சொந்த ஆட்சி வீடுகளான தனுசு, மீன ராசிகளில் சஞ்சாரம் செய்யும் வருடங்களில் நீதித்துறை, நிதித்துறை, வழக்கறிஞர், கௌரவமான உயர்ந்த தொழில்கள், ஆசிரியர், பொருளாதாரத்துறை போன்ற தொழில்களைச் செய்பவர்கள் ஏற்றம் அடைவார்கள்; கௌரவிக்கப்படுவார்கள்.
குரு- மகரம், கும்பம்
கோட்சார குரு மகரம், கும்ப ராசிகளில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் தொழில்துறை சிறப்படையும். இரும்பு, எண்ணெய், கனிமப் பொருள், தோல் தொழில் ஏற்றமடையும்.
குரு கிரகம் மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளில் கோட்சார நிலையில் சஞ்சாரம் செய்யும் வருடங்களில் பூமியில் நல்ல மழை பெய்யும். தங்கம், வைரம் வரத்து குறையும். இவற்றின் விலையேறும். மிதுனம், கடகத்தில் குரு இருக்கும் காலங்களில் ஆண் குழந்தைகள் அதிகமாகப் பிறக்கும்.
கடகம், விருச்சிகம், மகரம், மீன ராசிகளில் குரு சஞ்சாரம் செய்யும் வருடங்களில் மழை குறையும். விளைச்சல் குறையும். வறட்சி, பஞ்சம் ஏற்படும். ஒருசில இடங்களில் மழையும், ஒருசில இடங்களில் மழை குறைவாகவும் பெய்யும்.
சனி- மேஷம்
கோட்சார நிலையில் சனி, மேஷ ராசியில் சஞ்சாரம் செய்யும் வருடங்களில் காவல்துறை, இராணுவம், விளையாட்டுத்துறை, தீயணைப் புத்துறை, மருத்துவத் துறையினருக்கு நெருக்கடி, சோதனை, சிரமங்கள் உண்டாகும். தீவிபத்து, போர்ச் சூழல் ஏற்படும். விவசாயம், பொறியியல், கல்வித்துறை, கட்டுமானப் பொருட்கள், தீப்பெட்டி, பட்டாசுத் தொழில்கள் பாதிப்படையும். பலவிதமான சிரமங்கள், சோதனைகளைச் சந்திக்கும். பத்திரிகையாளர்களுக்கு சோதனையான காலம். இவர்கள் அவமதிக்கப்படுவார்கள்; பல பிரச்சினைகளைச் சந்திப்பார்கள். பிரபலமான கலைஞர்கள், கல்வியாளர்களில் ஒருவர் மரணமடைவார்.
சனி- ரிஷபம்
ரிஷப ராசியில் சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் கலைத்துறை, நீதித்துறை, நிதி நிறுவனங்கள், வங்கித்துறை, வீட்டுவசதி வாரியம், கேளிக்கை, தங்கும் விடுதிகள், கட்டுமானத்துறை, சுற்றுலா, ஓவியம், சிற்பத் தொழில் செய்பவர்கள் பலவிதமான சோதனைகள், பிரச்சினைகள், குழப்பம், தடைகளைச் சந்திப்பார்கள்.
பங்குச் சந்தையில் மோசடிகள், கலைத் துறையைச் சேர்ந்த பெண்களுக்கு அவமானம் ஏற்படும். கலைத்துறையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரும், மிகவும் புகழ்பெற்ற மனிதர் ஒருவரும் மரணமடைவார். ஆடை, ஆபரணங்கள் விலையேறும்.
சனி- மிதுனம்
மிதுன ராசியில் சனி இருக்கும் வருடங்களில் கல்வி நிறுவனங்கள், கல்வி சம்பந்தமான தொழில்கள், தகவல் தொடர்பு, பத்திரிகையாளர்கள், விளையாட்டு, ஆயுத உற்பத்தி, எழுத்தாளர்கள், காகிதம் ஆகிய தொழில் துறையைச் சேர்ந்தவர்கள் பிரச்சினைகள், தொழிலில் தடைகளைச் சந்திப் பார்கள். இந்தப் பொருட்கள் விலையேறும்.
மதம், இனம் சார்ந்த தீவிரவாதிகளுக்கு சோதனைக் காலம். பிரபலமான மதவாதி, தீவிரவாதி ஒருவர் கொல்லப்படுவார். அல்லது மரணமடைவார். புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களுள் ஒருவர் மரணமடைவார். நில பேரங்கள், நிலப்பதிவுத்துறையிலுள்ள ஏமாற்று வேலைகள் வெளிச்சத்திற்கு வரும்.
சனி- கடகம்
கடகச் சனிக் காலத்தில் நீர்நிலை கள் பாதிப்பு, அழிவு, நீரினால் விபத்து கள், அழிவுகள் அதிகரிக்கும்.சாராயம், மது வகைகள் விஷத்தால் மரணங்கள் அதிகரிக்கும். மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் மரணங்கள் ஏற்படும். வாந்தி, பேதி, காலரா போன்ற நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். உணவு, குடிநீர்மூலம் புதிய நோய்கள் பரவும். தங்கம், வெள்ளி, உப்பு, உணவுப்பொருட்கள் விலையேறும். மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு, ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு உண்டாகும்.
பிரபலமான பெண்களுக்கு நெருக்கடி உண்டாகும். பெண்கள் பற்றிய பிரச்சினைகள் குழப்பத்தை உண்டுபண்ணும். பெண்கள் வீதிக்கு வந்து நியாயம் கேட்டுப் போராடு வார்கள். மதம், சாதித்தலைவர் ஒருவர் மரண மடைவார். மதவாதிகள், சாதித் தலைவர் களுக்கு அவமானம், ஆபத்துகள் உண்டாகும்.
சனி- சிம்மம்
சிம்மராசியில் சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் உலக அளவில் பல்வேறு நாடுகளில் அரசியல் மாற்றங்கள் ஏற்படும்.
அரசியல்வாதிகள், அரசு உத்தியோகஸ்தர் களுக்கு பல்வேறு சிரமங்கள் உண்டாகும். அரசியலமைப்புச் சட்டங்களில் மாற்றங் கள் வரும். தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள் போடப்படும். முதலாளித்துவ கை ஓங்கும். தொழில் செய்பவர்களுக்கு தடைகள் உருவாகும். பொதுமக்களுக்கு அரசாங்கம்மீதும், ஆட்சி செய்வோர்மீதும் வெறுப்பு, கோபம் உண்டாகும்.
காடுகள் சேதமாகும். நெருப்பினால் அழிவு, உயிர்ச் சேதங்கள் உண்டாகும். குழந்தை கள் அதிகம் இறப்பார்கள். அரசு நிறுவனங் கள் முடங்கும் அல்லது அரசாங்கத்தால் முடக்கப்படும்; அழிக்கப்படும். எண்ணெய், பெட்ரோல், டீசல், கட்டுமானப் பொருட்கள் விலை உயரும்.
சனி- கன்னி
கன்னி ராசியில் சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் பள்ளி, கல்லூரி, கல்வித்துறை, தகவல் தொடர்பு, பத்திரிகைத் துறை, பத்திரிகை யாளர்கள், அணு, ஆயுதம், மதுபானத் தொழில் ஆகியவற்றில் பிரச்சினை, குழப்பங்கள், தடைகள் உண்டாகும். இரும்பு, நிலக்கரி, கனிமச் சுரங்கங்கள், பெட்ரோல் கிணறுகளில் விபத்துகள், உயிர்ச்சேதம் ஏற்படும். காடுகள், பூங்காக்கள் பராமரிப்பின்றி அழியும்.
பிரபலமான வியாபாரி, தொழிலதிபர் என ஒருவர் மரணமடைவார். தொழிற்சங்கத் தலைவர் மரணமடைவார். எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் சர்ச்சைகளில் சிக்குவார்கள். இளம் காதலர்கள் பிரிவார்கள். காகிதம், கணினிப் பொருட்கள் விலை உயரும். கல்விக் கட்டணம் உயரும்.
சனி- துலாம்
துலாம் ராசியில் சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் தொழில்துறை, தொழிலாளர் நலன் முன்னேற்றமடையும். கலைத்துறை, வங்கி, நிதித்துறை நிறுவனங்கள், சுற்றுலா, கேளிக்கை விடுதிகள் தொழிலில் பிரச்சினைகள் உண்டாகும். கலைஞர்களுக்கு சோதனைகள் உண்டாகும்.
சாதி, மதத் தலைவர்களுக்கு அவமானம், ஆபத்துகள் உண்டாகும். மதத் தலைவர்களில் ஒருவருக்கு மரணம் உண்டாகும். விவாகரத்து வழக்குகள் அதிகமாகும். ஆடை, ஆபரணங்கள், வாகனங்கள், தங்கம், வெள்ளி, சர்க்கரை விலையேறும். சர்க்கரை ஆலைகள் பாதிப்படையும்.
சனி- விருச்சிகம்
சனி, விருச்சிக ராசியில் உள்ள வருடங் களில் தீவிரவாதிகள், காவல்துறை, ராணுவம், தீயணைப்புத்துறை, விளையாட்டுத் துறை, அணு ஆயுதம், விவசாயம், பல், இதயம், பால்வினை நோய் மருத்துவர்கள், கனிமவளம், பொறியியல் துறையினருக்கு சிரமம், பிரச்சினைகள், தொழிலில் தடைகள் உண்டாகும்.
தீப்பெட்டி, வெடிபொருட்கள், நெருப்பு சம்பந்தமான தொழிலில் விபத்துகள் உண்டாகும். போர் அபாயச் சூழல் ஏற்படும். பிரபலமான தீவிரவாதிகளில் ஒருவர் கொல்லப்படுவார். புகழ்பெற்ற விளையாட்டு வீரர் ஒருவர் மரணமடைவார்.
சனி- தனுசு
தனுசு ராசியில் கோட்சார சனி சஞ்சாரம் செய்யும் வருடங்களில் பல ஆலயங்கள் பராமரிப்பின்றி பாழடையும். தீர்த்த யாத்திரை, புண்ணிய யாத்திரை செல்பவர்களுக்கு விபத்துகள், உயிர்ச்சேதம் உண்டாகும். சாதி, மதத் தலைவர்களுக்கு பிரச்சினைகள் உண்டாகும். கலைத்துறையினர், மதவாதிகளுக்கு, தலைவர்களுக்கிடையே பிரச்சினை, மோதல் உண்டாகும். நீதிமன்றச் செயல்பாடுகள் நேர்மையாக இராது. நீதித்துறையில் பணிபுரிவோர் ஆட்சியாளர்களின் நெருக்கடிக்கு ஆளாவார்கள். குழந்தைகள் நலத்துறை, தர்ம ஸ்தாபனங்கள், கலைத்துறை, வங்கி, நிதி நிறுவனங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும்.
இளம் பெண்களுக்கு: அவர்கள் கற்பிற்கு சோதனை, பிரச்சினைகள் ஏற்படும். பெண்கள் தவறான வழிகளில் துணிந்து ஈடுபடு வார்கள். அழகு நிலையங்களில் நடக்கும் அந்தரங்கச் செயல்கள் அம்பலத்திற்கு வரும். கலைத்துறை, மதத்துறை தொழிலில் பிரபலமானவர்கள் மரணமடைவார்கள்.
சனி - மகரம்
மகர ராசியில் சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் எண்ணெய், டீசல், பெட்ரோல், எரிபொருட்கள், கருங்கல், ஜல்லி, கம்பி, எள், கடுகு, உளுந்து, பிண்ணாக்கு, கால்நடை தீவனப் பொருட்கள், கணினிப் பொருட்கள் விலை உயரும். கல்விக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் உயரும்.
தொழிற்சங்கத் தலைவர்கள் நெருக்கடி களைச் சந்திப்பார்கள். ஆனால் தொழிலாளர் களும் தொழில்துறையும் மேன்மையடையும். நிர்வாகத்தில் தொழிலாளர்களுக்கு எதிரான போக்கு குறையும். ஆசிரியர்- மாணவர் உறவு பாதிப்படையும். பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர்களில் ஒருவர் மரணமடைவார். எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் அவமானப்படுவார்கள்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 99441 13267